எண்ணூர் துறைமுகத்தில் 3 பெரிய கப்பல்கள் அல்லது 4 சிறிய கப்பல்கள் நிற்கக் கூடிய அளவில் மெகா சரக்குப் பெட்டகக் கப்பல் தளம் ரூ.1,300 கோடியில் அமைக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இது குறித்து, எண்ணூர் துறைமுகத்தில் இன்று நடந்த கடல் ஆழப்படுத்தும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் துவக்க விழாவில் அவர் பேசுகையில், "எண்ணூர் துறைமுகத்தில் 3 பெரிய கப்பல்கள் அல்லது 4 சிறிய கப்பல்கள் நிற்கக் கூடிய அளவில் மெகா சரக்குப் பெட்டக கப்பல் தளம் ரூ.1,300 கோடியில் அமைக்கப்படும். ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்தச் சரக்குக் கப்பல் தளத்தில் ஒரு நாளில் 8 ஆயிரம் சரக்குப் பெட்டகங்களையும், ஒரு ஆண்டில் 1.5 மில்லியன் சரக்குப் பெட்டகங்களையும் கையாளலாம். முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.
மேலும், "எண்ணூர் துறைமுக பகுதியில் கடலை ஆழப்படுத்த ரூ.90 கோடி, சாலைகள் அமைக்க ரூ.9 கோடி என மொத்தம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இன்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எண்ணூர் துறைமுகம் வருங்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாக உருவாகும். இத்துறைமுகம் தொடங்கப்பட்ட 5 ஆண்டு காலத்தில் 10.71 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 1.04 லட்சம் டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு 14 திட்டங்கள் ஒதுக்கியதில் 4 திட்டங்கள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நஷ்டத்தில் இயங்கி வந்த கப்பல் துறை லாபகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. சரக்குகள் கையாளும் திறன் 20 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறையின் பங்கு அதிகம். ஏற்றுமதி வளர்ச்சி 24 சதவிதமாக வளர்ந்துள்ளது. இறக்குமதி வளர்ச்சி 3 சதவீதமாக உள்ளது. 2012 ஆண்டில் 1,500 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கொள்ளளவு இருக்க வேண்டும் என்ற இலக்குடன் இத்துறை செயல்பட்டு வருகிறது" என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.