தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான உதவித் தொகை விடயத்தில் மத்திய அரசின் நிபந்தனையை ரத்து செய்ய மேற்கொண்ட முயற்சிகளுக்காக முதல் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ள திருமாவளவன், இது தொடர்பாக தாங்கள் அறிவித்திருந்த ரயில் மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தாழ்த்தப்பட்ட - பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பாக அண்மையில் விதிக்கப்பட்ட நிபந்தனையை இந்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இதை வரவேற்று பாராட்டுகிறோம்.
சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்படி சேர்க்கை பெற்ற மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகையை பெற முடியும் என்று இந்திய அரசின் சமூக நீதித்துறை திடீரென்று நிபந்தனை விதித்தது. இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஜனவரி 30-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். மேலும் தமிழக முதலமைச்சரிடம் நேரில் முறையிட்டு இந்திய அரசை வற்புறுத்த கோரினோம். அத்துடன் மார்ச் முதல் வாரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரித்தோம்.
இந்நிலையில் இந்திய அரசு, அந்த ஆணையை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் கோரிக்கை நிறைவேறி விட்டதால் ரயில் மறியலை கைவிடுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.