23 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ரூ.87 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் 2006-2007ஆம் ஆண்டில் 6 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. 32 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக தமிழக அரசுக்கு 10 விழுக்காடு ஈவுத் தொகையாக ரூ.87 லட்சத்தை இந்நிறுவனம் வழங்குவது சாதனையாகும்.
இதன் அடையாளமாக, 87 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் கருணாநிதியிடம் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி இன்று வழங்கினார். முன்னதாக, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்காகக் கிண்டி தொழிற்பேட்டையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள பன்மாடிக் கட்டடத்தின் முன்புறத் தோற்ற வரைபடத்தினை முதலமைச்சர் கருணாநிதி பார்வையிட்டு ஒப்புதல் வழங்கினார்.