Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதி திராவிட மாணவர்கள் கல்வி உதவித் தொகை நிபந்தனை ரத்து!

ஆதி திராவிட மாணவர்கள் கல்வி உதவித் தொகை நிபந்தனை ரத்து!
, வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (09:31 IST)
முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றஆதிதிராவிட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விதிக்கப்பட்ட நிபந்தனையை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது.

பிளஸ் 2‌வி‌ல் தேர்ச்சி பெற்று தொழில்பட்ட படிப்புகளில் சேர்ந்து படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 60 ‌விழு‌க்காடு மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை‌த் தொட‌ர்‌ந்து க‌‌‌ல்‌வி உத‌வி‌த் தொகை பெறு‌ம் ‌நிப‌ந்தனையை கை‌விட‌க் கோ‌ரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை ஏற்று, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனையை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சமூகநீதி மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரி மீராகுமார் முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவித்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, அம்மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் 60 ‌விழு‌க்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே வழங்கப்படும் என்ற மத்திய அரசின் விதிமுறையால், பல மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற இயலாத நிலை ஏற்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொழில் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ்‌2 தேர்வில் தேர்வு பெற்றாலே போதும் என்ற நிலையில், மத்திய அரசு விதித்த இந்த புதிய நிபந்தனையால், பல மாணவர்கள் உதவித் தொகை பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்து, கல்வி உதவித் தொகைத் திட்டத்தை பழைய விதிமுறைகளின்படியே தொடர்ந்து செயல்படுத்துமாறு மத்திய சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மீரா குமாருக்கு, முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஜனவரி மாதம் 9ஆ‌ம் தேதி கடிதம் எழுதினார்.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோள் பரிசீலனை செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டம் பழைய நெறிமுறைகளின்படியே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதியிடம், மத்திய சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மீராகுமார் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil