பிறந்த நாளையொட்டி அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60-வது பிறந்த நாளை பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடுகிறார். இதற்காக தஞ்சை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய முடிவு செய்தார். நேற்று அவர் சென்ற விமானம் பழுதடைந்ததால் காரில் திருக்கடையூர் சென்றார்.
நேற்று மாலை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு ஜெயலலிதா, சசிகலா வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது கோயில் குருக்கள் கணேசன் அளித்த மாலையை ஜெயலலிதாவுக்கு சசிகலாவும் சசிகலாவுக்கு ஜெயலலிதாவும் அணிவித்து கொண்டனர்.
பின்னர் கோயிலுக்குள் சென்ற ஜெயலலிதா விநாயகர் சன்னதி அமிர்தகடேஸ்வரர் சன்னதி,காலசம்ஹார மூர்த்தி சன்னதி ஆகியவற்றிற்கு சென்று தரிசனம் செய்து விட்டு பிள்ளை பெருமாநல்லூரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், அஷ்ட ஹோமம், மிருத்தியு ஹோமம், தன்வந்திரி ஹோமம், மகம் நட்சத்திர ஹோமம் ஆகியவற்றில் ஜெயலலிதா கலந்து கொண்டார். அதன் பின்னர் அபிராமி சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் 9 மணிக்கு வெளியே வந்தார்.
ஜெயலலிதா வருகையையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.