ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதல் தொடர்பாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ம.தி.மு.க. கட்சி பொதுக்கூட்டத்தில் தி.மு.கவினர் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில், ம.தி.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், குளித்தலை நகராட்சி துணை தலைவர் எம். பல்லவி ராஜா உள்பட 15 ம.தி.மு.க.வினர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ம.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பலத்த காயமடைந்த நாஞ்சில் சம்பத் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவர், தமிழகத்தில் ம.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. செய்த திட்டமிட்ட சதிச்செயல் என்று கூறினார்.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குளித்தலை தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்பட 9 பேரை நேற்று நள்ளிரவு கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.