ஈரோடு அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளப்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன்(62). இவருடைய இரண்டு ஏக்கர் நிலத்தை விற்பதற்காக நிலத்தின் சிட்டா அடங்கல் தேவைப்பட்டது. இதை வாங்குவதற்காக கூகலுõர் கிராம நிர்வாக அதிகாரி சுகுமாரிடம்(50) சென்று தனக்கு சிட்டா அடங்கல் தேவைப்படுகிறது என்றார். செங்கோட்டையன் கேட்ட ஆவணங்களை கொண்டுக்க வேண்டும் என்றால் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி கூறினார்.
இதனால் கோபமடைந்த செங்கோட்டையன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கண்ணம்மாள், ஆய்வாளர் ராஜா மற்றும் போலீஸார், ரசாயனம் தடவிய பணத்தை செங்கோட்டையனிடம் கொடுத்து அனுப்பினர்.
பணத்தை எடுத்து சென்று நேற்று கிராம நிர்வாக அதிகாரி சுகுமாரிடம் கொடுத்தார். மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாக சுகுமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் வருவாய் துறை பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.