''தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு சொந்தமான கேப்டன் பண்ணையில் ஆக்கிரமிப்பட்ட நிலத்திலிருந்து 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்'' என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே தேவாதூர் கிராமத்தில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் பண்ணை உள்ளது. அங்குள்ள விளாகம், அருங்குணம், முள்ளி முருக்கஞ்சேரி, தேவாதூர் ஆகிய கிராமங்களில் 402.24 ஏக்கர் பரப்பில் கேப்டன் பண்ணையை நடிகர் விஜயகாந்த் அமைத்துள்ளார். இதில் 363.62 ஏக்கர் மட்டுமே அவருக்கு உரிய பட்டா நிலம் ஆகும். மீதியுள்ள 38.62 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பண்ணைக்குள் 26.52 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4.01 ஏக்கர் நிலம், பன்னீர்செல்வம் என்ற தனி நபருக்கு சொந்தமான 8.09 ஏக்கர் நிலத்தையும் சுற்றி வளைத்து பெரிய மின்வேலி போடப்பட்டுள்ளது. உடனடியாக அந்த மின்வேலியை அகற்றி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவாதூர் ஊராட்சி துணை தலைவி மீனா ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஷ்ராவிடம் கடந்த 15ஆம் தேதி புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து மதுராந்தகம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 88 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஓடைப் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் தாக்கீடு ஒட்டினர். அந்த தாக்கீதுக்கு 21 நாட்களில் ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொதுப்பணித்துறையே ஆக்கிரமிப்பை அகற்றும். அதற்குரிய செலவுகளை உரியவர்கள் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.