பிரபல கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் உடல் நல குறைவின் காரணமாக இன்று காலை 6.30 மணி அளவில் மருத்துவமனையில் காலமானார்.
74 வயதாகும் அவருக்கு மனைவி ஒரு மகன், பேரன், பேத்தி ஆகியோர் உள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தில் அதிக ஈடுபாடுள்ள அவர் இதய,சிறு நீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த ஜனவரி 29ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் காலமானார். அப்போது அவர் அருகில் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.
பின்னர், பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிறிஸ்தவ மதத்தில் அதிக ஈடுபாடுடைய அவர், கடந்த பல ஆண்டுகளாக 'இயேசு அழைக்கிறார்' என்ற ஜெப வீடு மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்தார்.
முதல்வர் இரங்கல் !
பிரபல கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிறித்தவ மதத்தின் பிரசித்தி பெற்ற போதகர், முனைவர் டி.ஜி.எஸ். தினகரன் திடீரென மறைந்த செய்தி அவரோடு நீண்ட கால நட்பும், தொடர்பும் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியாகும்.
அவருடைய உரைகளைக் கேட்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இன்று அந்த மக்கள் எல்லாம் விம்மியழவும், வேதனையில் மூழ்கவுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டு அவர் மறைந்து விட்டார். மறைந்தவர் புகழ் என்றென்றும் நம் உள்ளங்களில் நிறைந்தும், நிலைத்தும் நிற்கும்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், குறிப்பாக அவருடைய செல்வன் பால் தினகரனுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.