அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை அமைக்கும் பணி மார்ச் 7ஆம் தேதி அன்று தொடங்கப்படும்'' அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைப்பு உருவாக்கப்படும் என்று பொதுக்குழுவில் எடுத்த முடிவிற்கிணங்க, அ.இ.அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை அமைக்கும் பணி மார்ச் 7ஆம் தேதி தொடங்கப்படும்.
பாசறை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்டம் வாரியாக முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது. தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுக்கும், மாவட்டக் குழுக்களுக்கும் உதவி புரிய, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி பகுதி-வட்டம், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பிற அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர்கள், பிரதிநிதிகள் அந்தந்த ஒன்றிய, நகர பேரூராட்சிக் குழுக்களில் இடம் பெறுவார்கள்.
மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதி- வட்டம், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் குழுக்களுக்கான பட்டியல் மாவட்டங்களுக்குப் பொறுப் பேற்றிருக்கும் தலைமைக்கழக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.