ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவல்லன்காட்டைச் சேர்ந்தவர் தாமோதரன் ரெட்டி, இவரது மகள் பாக்யலட்சுமி. இவர் சென்னையை சேர்ந்த குரு என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பாக்யலட்சுமி திருவல்லன்காட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோமதியிடம் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் பாக்யலட்சுமியின் தந்தை தாமோதரன் ரெட்டியிடம் பெண் உதவி ஆய்வாளர் கோமதி விசாரணை நடத்தினார். அப்போது, ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று உதவி ஆய்வாளர் கோமதி கூறியுள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் தாமோதரன் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுரையின் பேரில் தாமோதரன் ரூ.10 ஆயிரத்தை பெண் உதவி ஆய்வாளர் கோமதியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், பெண் உதவி ஆய்வாளர் கோமதியை கையும் களவுமாக பிடித்தனர்.