ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை செய்யப்பட்ட கால்நடைகள் கர்நாடகா மாநிலத்திற்கு அதிகமாக கொண்டுசெல்லப்படுகிறது.ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதி காளை மற்றும் மாடுகளுக்கு தமிழக அளவில் பிரசித்தி பெற்ற இடமாகும். காங்கேயம் காளை என்றாலே அதற்கு தனி மதிப்பும், தனி விலையும் உள்ளது. விவசாயிகள் இந்த காளை மற்றும் மாடுகளை பராமரிக்கவே தனியாக வேலையாட்கள் வைத்துள்ளனர்.ஆனால் தற்போது இந்த நிலை உள்ளதா என்றால் இல்லை. காரணம் பருவமழை அந்தந்த பருவங்களில் சரியாக பெய்யாத காரணத்தால் விவசாய கிணறுகள் வறண்டுவிட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு விவசாயிகளின் அடிப்படை வாழ்க்கை தரமும் மாறிவிட்டது. தாங்கள் வைத்துள்ள கால்நடைகளுக்கு சரியான தீவனங்கள் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக கால்நடைகளை விற்பனை செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். பெரும்பாலும் கிராமத்தில் நடக்கும் சந்தைகளில் கால்நடைகள் விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது.தற்போது கர்நாடகா மாநிலம் கொள்ளேகால், குண்டல்பேட்டை, மைசூரு,சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தமிழகம் வந்து காங்கேயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் காளை, மாடுகள் மற்றும் எருமைகள் வாங்கி லாரி மூலம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா மாநிலம் கொண்டு செல்கின்றனர்.
இந்த வழியாக மாதத்திற்கு குறைந்தது 50 லாரிகளுக்கு மேல் கால்நடைகளை ஏற்றி செல்வதை பார்க்கமுடிகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் வரலாற்று புகழ்மிக்க காங்கேயம் காளைகளை நாம் பார்ப்பதே அதிசயமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.