''சுயமரியாதையை இழந்தவன் கோழையாகத்தான் வாழமுடியும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாடு (1929) 80-வது ஆண்டு தொடக்க விழாவும், முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு விழா செங்கல்பட்டு கே.ஆர்.ஜி.திடலில் நேற்று நடந்தது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
விழாவில் தந்தை பெரியார் படிப்பகம் அடிக்கல். 1929 சுயமரியாதை மாகாண மாநாட்டின் நினைவு வரலாற்று கல்வெட்டினைத் திறந்து வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இது திராவிட இயக்க பெருவிழா என்றுதான் சொல்லவேண்டும். 1929-ல் இங்கு சுயமரியாதை மாகாண மாநாடு நடந்தபோது, நான் 5 வயது சிறுவனாக திருக்குவளையில் விளையாடிக்கொண்டிருந்தேன். இன்று செங்கல்பட்டில் மாநாடு நடந்த இடத்தில் நான் பாராட்டப்படுகிறேன், சிறப்பிக்கப்படுகிறேன். இதற்கெல்லாம் காரணம் எனக்கு பெரியார், அண்ணா வகுத்துகொடுத்த பகுத்தறிவு பாதையில் நான் நடப்பதால் தான் கிடைத்துள்ளது. இதை நான் மறந்துவிட மாட்டேன்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில்தான் செல்கிறேன். ஆட்சியை காப்பாற்ற என்று சொல்லமாட்டேன். எந்த லட்சியத்திற்காக இந்த ஆட்சி விளங்குகிறதோ, அந்த லட்சியத்தை காப்பாற்ற செயல்படுகிறேன். எந்த நிலையிலும் சாவே வா வா என்று அழைத்தாலும், பெரியார் கொள்கைகள் தான் தெரியுமே தவிர, வேறு எதுவும் கண்களுக்கு தெரியாது. அவர்கள் வகுத்து கொடுத்த கொள்கைகள் தான் தெரியுமே தவிர வேறு எந்த கொள்கையும் தெரியாது. அதுதான் இன்றைக்கும் தெரிந்து கொண்டு இருக்கிறதே தவிர, வேறு எதுவும் இல்லை.
ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று சிலர் மிரட்டுகிறார்கள். ராவணன் என்று சொன்னார்கள். இரணியன் என்று சொன்னார்கள். நான் இரணியனாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய கொள்கைக்கு மாறாக அவர்களை நான், பிரகலாதனாக கருதினேனே தவிர, இரணியன் பிள்ளைகளாக கருதமாட்டேன். அதேபோல ராவணன் என்று சொன்னதற்காக நான் கவலைப்பட போவதும் இல்லை. அப்படி சொன்னவர்கள் சீதையும் அல்ல. அடிகளாரை வைத்துக்கொண்டு அதற்கு மேல் விரிவாக எதையும் சொல்ல விரும்பவில்லை.
ஒரே இடத்தில் 95 அடி உயர சிலை இருப்பதை காட்டிலும் 95 இடங்களில் பட்டி, தொட்டி எங்கும் சமத்துவபுரங்கள் அமைத்து பெரியார் கொள்கைகளை அங்கு ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதால், சமத்துவபுரங்கள் மேலும் அமைக்கப்பட உள்ளன. இவைகள் எல்லாம் நிறைவேற்றக்கூடாது என்றுதான், ஆட்சியை கலை, ஆட்சியை கலை என்று துடிக்கிறார்கள். பெரியார் கொள்கைகளை பட்டவர்த்தனமாக நிறைவேற்றி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் ஆட்சியை கலை, ஆட்சியை கலை என்கிறார்கள். ஆட்சியை கலைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆட்சியை கலைத்துவிட்டு, வேடிக்கை பார்க்கக்கூடிய காரியம் அல்ல. இவர்கள் யாரிடத்தில் முறையிடுகிறார்களோ, அவர்கள் நன்றிக்கு இலக்கணம் தெரியாதவர்கள் அல்ல அவர்கள்.
அவர்களுக்கும் சட்டம் தெரியும், அரசியல் தெரியும். ஆகவே நான் யாரையும் பயமுறுத்தவில்லை. எச்சரிக்கையும் விடவில்லை. எனக்கு நானே அறைகூவலாகத்தான் விட்டுக்கொள்கிறேன். நான் ஒன்றும் முதல்-அமைச்சருக்கு மகனாக பிறந்தவனும் அல்ல. நான் இசைவேளாளர் குலத்தில் பிறந்தவன். இசை வேளாளர் குலத்தில் பிறந்தவர் தான் ராஜரத்தினம் பிள்ளை. அவை எல்லாம் உங்களுக்கு தெரியும்.
சுயநலத்திற்கும், சுயமரியாதைக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ள வேண்டும். சுயமரியாதையை இழந்தவன் கோழையாகத்தான் வாழமுடியும். கோழையாக வாழவிரும்புகிறாயா? வீரனாக சாக விரும்புகிறாயா? என்று கேட்டால், உண்மையான தமிழன் நான் வீரனாகத்தான் சாக விரும்புகிறேன் என்று சொல்வான். அவன் தான் சுயமரியாதைக்காரன். நான் வாழ்ந்தால் போதும் என்று சொல்பவன் சுயமரியாதைக்காரன் அல்ல. இதைத்தான் ஆணித்தரமாக நம்மிடம் விதைத்தார்கள் தந்தை பெரியாரும், குருநாதர் அண்ணாவும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.