''வீடு கட்டுபவர்களுக்கு 200 மூட்டை சிமெண்ட் போதுமானதாக இருக்காது என்று அறிந்த முதலமைச்சர் கருணாநிதி தற்போது 400 மூட்டைகளாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்'' என்று சிவில் சப்ளை பொது மேலாளர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவில் சப்ளை பொது மேலாளர் கோதண்டராமன் கூறுகையில், சிமெண்ட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசே நேரடியாக மலிவு விலை விற்பனை திட்டத்தை தொடங்கியது. ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு மூட்டை ஒன்று ரூ.200 விலையை நிர்ணயித்து வழங்கி வருகிறது. தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் மூலம் சிமெண்ட் விற்பனை கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது.
1000 சதுர அடிக்கு உட்பட்ட இடத்தில் வீடு கட்டுவோருக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. முதலாவதாக 100 மூட்டை வழங்கப்பட்டது. பின்னர் இவை 200 மூட்டைகளாக உயர்த்தப்பட்டது. அதன்படி கடந்த 25 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மலிவு விலை சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வீடு கட்டுபவர்களுக்கு 200 மூட்டை சிமெண்ட் போதுமானதாக இருக்காது என்று அறிந்த முதலமைச்சர் கருணாநிதி தற்போது 400 மூட்டைகளாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய உத்தரவு இன்று முதல் நடை முறைக்கு வந்தது. இதையடுத்து வீடுகட்ட விரும்பும் ஏழை, நடுத்தர மக்கள் அதற்குண்டான பிளான் அனுமதியுடன் சிமெண்டிற்குரிய தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் கொடுத்தால் உடனே மூட்டையை பெற்றுக் கொள்ளலாம். தாசில்தாரிடம் அனுமதி பெற தேவையில்லை. கட்டிட பிளான் அனுமதி இல்லை என்றால் சிமெண்ட் வழங்க மாட்டார்கள்.
தற்போது உள்ளூர் சிமெண்ட் ரூ.200க்கும், இறக்குமதி செய்யப்படுகிற சிமெண்ட் ரூ.220க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரசின் புதிய உத்தரவில் பழைய வீடுகளை பழுது பார்க்கவோ, மாற்றி அமைக்கவோ பராமரிக்கவோ விரும்பினால் கூட 25 மூட்டை சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பிளான் அனுமதி எதுவும் தேவை இல்லை.
கடந்த 15ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் 9,590 மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 800 மூட்டைகள் விற்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 750 டன், விற்பனை நடந்துள்ளது. 15 ஆயிரம் மூட்டைகள் விற்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகவும் குறைந்த அளவில் 1,460 சிமெண்ட் மூட்டை மட்டுமே விற்பனை செய்யப் படுள்ளது என்று கோதண்டராமன் கூறியுள்ளார்.