திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஆவாரம்பட்டியில் நேற்று மதியம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாடுகளையும், இதில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களையும் கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர்.
போட்டி தொடங்கியதும் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது அடக்க தயாராக இருந்த வீரர்கள் மாடுகளை தடுத்து நிறுத்தி அடக்கினர். அவிழ்த்து விடப்பட்ட சில மாடுகள் சீறிப்பாய்ந்து அடக்க வந்த வாலிபர்களை கொம்பால் தூக்கி பந்தாடியது. காளைகள் முட்டி தள்ளியதில் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மோகன் (25) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.