கேபிள் டிவி தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முதல்வர் கருணாநிதி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் டி.ஜி.வி.பி. சேகர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடும்பப் பிரச்சனையை முன் வைத்து தமிழகத்தில் உள்ள அப்பாவி கேபிள் டிவி ஆபரேட்டர்களை பலிகடாக்களாக ஆக்கக்கூடாது. ஆளுக்கு ஆள் கட்டுப்பாட்டு அறை அமைத்து மிரட்டத் தொடங்கினால் எங்கள் எதிர்காலம் என்ன ஆவது? அரசே கேபிள் டிவி தொழிலை ஆரம்பிக்க வேண்டும்.
மூன்றாவது நபரை எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் அனைத்து இடங்களிலும் புதிய கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். சட்டம்ஒழுங்கு சீர்குலையும் அபாயமும் உருவாகும். ஏற்கனவே தமிழகத்தில் தொழில் செய்து வரும் 50 ஆயிரம் கேபிள் டிவி உரிமையாளர்களும் அதை நம்பி இருக்கும் 2,00,000 குடும்பங்களும் அழித்து போகும் நிலை வரும்.
ஆட்சி மாறும் போதெல்லாம் நாங்கள் "கால்பந்து' போல உதைக்கப்படுகின்ற அவல நிலையும் ஏற்படும். எனவே, மூன்றாவது நபர்கள் தொழிலில் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் முன் கோரிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில், சென்னையை சார்ந்த கேபிள் டி.வி. உரிமையாளர்கள் காவல் துறையால் கடந்த 15 ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார்கள் என்கிற செய்தி பேரிடியாய் வந்திருக்கிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் குடும்ப அரசியலை முன் நிறுத்தி எங்கள் தொழிலை அழிக்க முனையக்கூடாது என்பதே முதல்வரிடம் நாங்கள் வேண்டுவதாகும். மத்திய அரசின் முன் எங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளோம். மத்திய அரசும், தாங்களும் எங்களை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பணிவுடன் வேண்டுகிறோம்.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் அத்துமீறி வட இந்திய நிறுவனத்திற்கு ஆதரவாக கேபிள் டி.வி. உரிமையாளர்களை கைது செய்து மிரட்டும் போக்கிற்கு முடிவெழுத வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.