தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள் இரயில்வே இருப்புப்பாதை கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 9ஆம் தேதி காலை தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் ஆயுதக்காப்பு அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 துப்பாகிகள், வாக்கிடாக்கி ஒன்றும் காணாமல் போனது.
தற்காக தங்கள் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஆய்வாளர், 2 தலைமை காவலர்கள், ஒரு முதல்நிலை காவலர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்திய போது ரங்கநாதன் என்பவரது வாழைத்தோட்டத்தின் அருகில் இரயில்வே இருப்புப்பாதை கால்வாயில் புதைக்கப்பட்டு இருந்த 5 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் ஒரு துப்பாக்கி, வாக்கிடாக்கியை கண்டுபிடிக்க தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தெரியவரவில்லை. காவல்துறையினர் மீது களங்கம் ஏற்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்று தெரிகிறது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.