எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்கள் காவல்துறையினரால் அச்சுறுத்தப் படவோ அல்லது துன்புறுத்தப்படவோ இல்லை. அவர்களை கடத்தி வைத்து கொண்டிருப்பதாகக் கூறி அவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் புகார் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் நேற்று அளித்த புகார் குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு:
மாம்பலம், கோடம்பாக்கம், கே.கே. நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஹாத்வே கேபிள்களை எஸ்.சி.வி. கேபிள் டி.வி இணைப்பு நடத்தி வரும் தி. நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் சர்மா (41), கே.கே. நகரைச் சேர்ந்த முரளிதரன் (44) ஆகியோரும் மற்றும் அவர்களை சார்ந்த சில ஆபரேட்டர்களும், கேபிள் இணைப்புகளை துண்டித்தும், அதன் ஒளிபரப்பை சேதப்படுத்தியும் வருவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் மாம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கப்பட்டு கேபிள் இணைப்புகளை துண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு உடனே அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையினரால் அச்சுறுத்தப் படவோ அல்லது துன்புறுத்தப்படவோ இல்லை.
உண்மை நிலை இப்படி இருக்க தெற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் துரைராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் கேபிள் ஆபரேட்டர்களை கடத்தி வைத்து கொண்டிருப்பதாகக் கூறி அவர்களை கண்டு பிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் புகார் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. எந்த ஒரு கேபிள் ஆபரேட்டரையும் காவல்துறை பிடித்து எங்கும் ஒளித்து வைத்திருக்கவில்லை.
தயாநிதி மாறனை பார்ப்பதை தவிர்த்து காவல் ஆணையாளர் மற்றும் கூடுதல் காவல் ஆணையாளர் வெளியே சென்றுவிட்டு பின்பக்க வாசல் வழியாக நுழைந்து விட்டார் என்று ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, பத்திரிகை தர்மத்திற்கு ஒவ்வாத விஷமத்தனமாகும். நாளை சென்னையில் நடக்க இருக்கின்ற இந்தியாவிலுள்ள அனைத்து பெருநகர் காவல் ஆணையாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருளைப் பற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பதற்காக காவல்துறை இயக்குனரை சந்திக்க காவல் ஆணையாளர் சென்றிருந்த நேரத்தில் தயாநிதி மாறன், காவல் ஆணையாளர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்துவிட்டு பத்திரிகை செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார்.
காவல் துறையினர் பொது மக்களுக்கு எப்போதும் பாதுகாவலர்களாக இருப்பார்களே அன்றி தனி நபர்களின் சுயலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படமாட்டார்கள். எந்த ஒரு கேபிள் ஆபரேட்டரோ, அவரது மனைவிமார்களோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ இது போன்ற புகார் காவல் ஆணையாளரிடமோ அல்லது வேறு காவல் உயர் அதிகாரியிடமோ எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.