இந்திய வம்சாவழியினர் வாழ்வதற்கான முழு உரிமையை வழங்கக் கோரி சென்னையில் உள்ள மலேசிய தூதரகம் முன்பு மறியல் செய்ய முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் வாழ்வதற்கான முழு உரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகம் முன்பு ராமகோபாலன் தலைமையில் இன்று தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, மலேசிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி மலேசிய தூதரக காவலர்களுக்கு பூச் செண்டு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் ராமகோபாலன் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது ராமகோபாலன் கூறுகையில், மலேசிய நாட்டை வளமாக்கிய இந்திய வம்சாவழியினருக்கு வாழ்வதற்கான முழு உரிமை அளிக்காத மலேசிய அரசுக்கு பொருளாதார தடையை இந்திய அரசு விதிக்க வேண்டும். பாமாயில் எண்ணெய்யை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. காமன்வெல்த், ஐ.நா. அமைப்பிலிருந்து மலேசியாவை நீக்க வேண்டும் என்றார்.