கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாவலத் திருவிழாவில் மீனவர்களை பங்கேற்க மத்திய, மாநில அரசுகள் உரிய வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரச்சினைக்குரிய கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி புனித அந்தோணியாரை வழிபடச் செல்வார்கள். 1974ஆம் ஆண்டுக்கு பின் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால் அவ்வப் போது பிரச்சினைகள் எழுந்தன.
ஆனால் 2002ஆம் ஆண்டிலிருந்து தமிழக மீனவர்களை அனுமதிப்பதில் இலங்கை அரசு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. 2002ஆம் ஆண்டில் 60 மீனவர்களும், 2005-ம் ஆண்டில் 11 மீனவர்களும் மட்டுமே இந்த கச்சத்தீவுக்கு சென்று வழிபட அனுமதிப்பப்பட்டனர்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் அந்தோணியார் கோவிலுக்குச் செல்ல உரிமை இருந்தும் தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது. எனவே ராமேஸ்வரம் வட்டார கிறிஸ்துவ மீனவர்கள் கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்ல உரிய வசதிகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக செய்ய வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.