புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலியானார். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பாப்பப்பன்விடுதி என்ற கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் வந்திருந்தன.
காளைகளை அடக்க வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீறி வந்த காளையை இளைஞர்கள் அடக்கி கொண்டிருந்தனர். அப்போது, சீறி வந்த காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் புகுந்தது.
இதில், நெருஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன் (40) என்பவர் காளை முட்டி நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் காளைகளை அடக்கிய 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
காளை முட்டி இலேசான காயம் அடைந்தவர்கள் அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்தவர்கள் அருகில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.