மதுராந்தகம் அருகே, விஜயகாந்த் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி துணை தலைவி மனு கொடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகா தேவாதூர் ஊராட்சி துணை தலைவியாக மீனா ஜெயராமன் என்பவர் உள்ளார். இவர் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஷ்ராவிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள விளாகம், அருங்குணம், முள்ளி முருக்கஞ்சேரி, தேவாதூர் ஆகிய கிராமங்களில் 402.24 ஏக்கர் பரப்பில் கேப்டன் பண்ணையை நடிகர் விஜயகாந்த் அமைத்துள்ளார். இதில் 363.62 ஏக்கர் மட்டுமே அவருக்கு உரிய பட்டா நிலம் ஆகும். மீதியுள்ள 38.62 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பண்ணைக்குள் 26.52 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 4.01 ஏக்கர் நிலம், பன்னீர்செல்வம் என்ற தனி நபருக்கு சொந்தமான 8.09 ஏக்கர் நிலத்தையும் சுற்றி வளைத்து பெரிய மின்வேலி போடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மேற்படி 5 கிராமங்களை சேர்ந்த கால்நடைகள், அடிக்கடி செத்து மடிந்து வருகின்றன. உடனடியாக அந்த மின்வேலியை அகற்ற வேண்டும். அத்துடன் ஆக்கிரமிப்பு குறித்து தக்க விசாரணை மேற்கொண்டு, அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சித் தலைவர் மிஷ்ரா, இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.