பிளஸ் 2 தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் கூடுதலாக ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்து விட்டது. ஆனால் அவர்களுக்கு மேலும் வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 செலுத்தி 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே தேர்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் சிறப்பு கட்டணத்தை மட்டும் செலுத்தி வரைவோலையை சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக இந்த துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் அரசு தேர்வு இயக்குனரகம், அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அனைத்து அரசு தேர்வுமண்டல துணை இயக்குனரகங்கள் (சென்னை தவிர) புதுச்சேரியில் உள்ள அரசு தேர்வு இணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கவேண்டும். உடனடியாக அங்கேயே ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வு மையங்கள் சென்னையில் மட்டும் அமைக்கப்படும். சான்றிதழ் அனுப்ப ரூ.30-க்கு தபால் தலை ஒட்டிய சுய முகவரியுடன் கூடிய கவர் ஒன்றினை விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும் என்று வசந்தி ஜீவானந்தம் கூறினார்.