சேது சமுத்திர திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற நடவடிக்கை : தி.மு.க. தீர்மானம்!
சேது சமுத்திர திட்டத்தை தாமதிக்காமல் தொடர்ந்து நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த தி.மு.க. தலைமை நிர்வாக குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், சற்குண பாண்டியன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி, கனிமொழி எம்.பி. மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா திட்டமிட்டே, விடுதலைப்புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் பெருகி வரும் அபாய சூழல் உள்ளது என்று இட்டுக்கட்டி பூதாகரமான ஒரு குற்றத்தை சுமத்தினார். தோழமைக்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் கூறிய சில கருத்துக்கள், ஜெயலலிதா கூறிய குற்றச் சாட்டை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக இக் கருத்தினை மறுத்து, கடந்த ஒரு ஆண்டுகளில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் மீதும், ஆயுதம் கடத்தியவர்கள் மீதும் தமிழக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளைப் புள்ளி விவரங்களுடன் அறிக்கையாக வெளியிட்டார்.
அமெரிக்காவுடனான செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை உள்பட பல சிக்கலான பிரச்சினைகளில் ஒரு சுமூக சூழல் உருவாவதற்கு, இடது சாரி கட்சிகளின் கருத்துக்களையும் அரவணைத்து மத்திய அரசின் ஆட்சி எவ்விதத் தடையுமின்றி நடைபெறுவதற்கு எடுத்த முயற்சிகளை சோனியா காந்திக்கும் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், அரசியல் நோக்கர்களும், நடுநிலையாளர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். இவ்வகையான உயரிய அணுகுமுறையைத் தி.மு.க. தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
தோழமை கட்சிகளுக்கு வேண்டுகோள்
ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ, சமதர்ம, கூட்டாட்சி நெறிகள் வெற்றி பெறவும், மீண்டும் மதவாத சக்திகளின் கையில் நாடு சென்று விடாமல் காத்திடவும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியுற்றவர்கள், திட்டமிட்டே செய்யும் சதி களுக்கு, நமது தோழமைக் கட்சிகள் தெரிந்தோ, தெரியா மலோ ஆதரவாக உள்ளன என்ற தோற்றத்தைக் கூட ஏற்படுத்தி விடக்கூடாது. தி.மு.க. கடைப்பிடித்து வரும் தோழமை உணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையும், ஆக்கப்பூர்வ மான கூட்டணி அணுகுமுறை யும் மென்மேலும் உறுதி பெறுவதற்கு நமது தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் கவனத்துடன் பணி யாற்ற வேண்டும் என்று தி.மு.கழகத்தின் இந்த நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான ரூ. 1,340 கோடி நிதி உதவிக்காகவும், தமிழக அரசு சென்னை மாநகரில் ரூ. 9,700 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்க எண்ணியுள்ள மெட்ரோ இர யில் திட்டத்திற்கான நிதி உதவிக்காகவும், தமிழக அரசு சார்பில் ஜப்பான் நாடு சென்று வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியுள்ள உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நிர்வாக குழு தனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறது.
150 ஆண்டுகளாக தமிழக மக்களின் கனவாக இருந்ததும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தி, பெருமளவிற்கு அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கக் கூடியதுமான சேது சமுத்திரத்திட்டத்தை மத்திய அரசு தி.மு.க. கழகம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு 2004-ம் ஆண்டு செயற்படுத்தத் தொடங்கியது.
திட்டப்பணிகள் இரண்டாண்டு காலமாக நடைபெற்று மொத்தப் பணியும் முடிவுறுகிற நிலையில் பகுத்தறிவுக்கு முரணானதும், வரலாற்றுக்குத் தொடர்பு இல்லாததுமான, கற்பனையான காரணங்களைத் தெரிவித்து இந்தத் திட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில், சில மதவாத பிற்போக்குச் சக்திகளும், அவர்களுக்கு உடந்தையாக இங்குள்ள சில அரசியல் கட்சிகளும் முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசியும், எழுதியும், செயல்பட்டும் வருகின்ற நிலையில், இந்தத் திட்டத்தினைத் தாமதிக்காது தொடர்ந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மத்திய அரசு எடுத்திட வேண்டும் என்று இந்த நிர்வாகக் குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.