''குடும்ப அட்டை வழங்கக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும்'' என்று அமைச்சர் வேலு கூறினார்.
உணவுத்துறை அமைச்சர் வேலு சென்னையில் இன்று அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா, கோதுமை மாவு (ஆட்டா) போன்றவைகள் இருப்பு இல்லை என்ற நிலையே இருக்கக் கூடாது.
விற்பனையாகாத பொருட்கள் இருந்தால் அவைகளை தேவையுள்ள நியாய விலைக்கடைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு நியாய விலைக் கடைகளுக்கு தேவையான பொருட்களை 60 விழுக்காடு முன்னதாகவே அரிசி போன்ற பொது விநியோகப் பொருட்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி முதல் அனைத்து பொருட்களையும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் பொருட்களின் மாதிரிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் வைக்க வேண்டும். குடும்ப அட்டை வழங்கக் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வேலு கூறினார்