''கூட்டணி பற்றி முடிவு எடுப்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாதான், தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் அல்ல'' என்று கி.வீரமணிக்கு வர்த்தக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து எச்.வசந்தகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் விமான பயணத்தின் போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை ஏதேச்சையாக சந்தித்துள்ளார். இரண்டு அரசியல் முக்கிய தலைவர்கள் முதல் முறையாக சந்திக்கிறபோது நாட்டைபற்றி பேசிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
இதுகூட புரிந்து கொள்ள இயலாத பகுத்தறிவு காவலர் கி.வீரமணி, அவர்களுடைய சந்திப்பிற்கு புதிய காரணம் கண்டுபிடித்து அங்கலாய்த்து இருக்கிறார். மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணியிலோ, தமிழகத்தில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலோ அங்கம் வகிக்காத வீரமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமார் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசபக்தி குடும்பத்தில் பிறந்தவர் விஜயகாந்த். அவரோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேச விரோத செயல் அல்ல. காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியையும் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுச்சியையும் உருவாக்குவதற்காகவே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் அருண்குமார்.
கூட்டணி பற்றி முடிவு எடுப்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாதான். ஏதேச்சையாக விமான பயணத்தில் விஜயகாந்த்தை சந்தித்ததனாலேயே கூட்டணி மாறிவிடும். அல்லது கூட்டணிக்கு துரோகம் செய்கிறார் என்ற அபூர்வ கண்டுபிடிப்பு வீரமணியின் பகுத்தறிவை பறைசாற்றுவதாக உள்ளது.
கருணாநிதியின் கவனத்தை ஈர்க்க கருணாநிதியுடைய எத்தனையோ சாதனைகளை பாராட்டுவதை விட்டுவிட்டு, விமான பயணத்தின் போது சந்தித்துக்கொண்ட தலைவர்களின் நற்பண்பை கலகம் மூட்டும் விதமாக கருத்து வெளியிட்டிருப்பது பகுத்தறிவு வாதிக்கு உகந்ததல்ல என்பதை வீரமணி உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வசந்த குமார் கூறியுள்ளார்.