கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில், சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பார்கவுன்சில் மூலம் வழக்கறிஞர்கள் சேமநல நிதி திரட்டப்படுகிறது. இந்த நிதி மூலம் மறைந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நலநிதி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் பிப்ரவரி 18ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் புறக்கணிக்கப்படும். மேலும், சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றங்களை புறக்கணிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பிலும் பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் புறக்கணிக்கப்படும் என்று அதன் சங்க தலைவர் பிரபாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.