கோவையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவை வ.உ.சி. பூங்காவில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கோவையிலுள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகளை கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30 லட்சம் வரை வசூலிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி பற்றி பேசப்போவதாக விளம்பரம் செய்துள்ளனர். ஏற்கனவே கோவை மத சம்பந்தப்பட்ட பதற்றமான பகுதியாகும். இதில் தேவையில்லாமல் இந்து மதத்தை பற்றி பேசுவார்கள் என அஞ்சுகிறோம். இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மார்ச் மாத இறுதியிலும், ஏப்ரல் முதல் வாரத்திலும் பள்ளி, கல்லூரிகளின் பொதுத்தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதிக்கப்படும். கட்டாய நன்கொடை வசூலை அரசாங்கமும் கண்டு கொள்ள வில்லை. எனவே, இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது.