''காவல் துறையை சீர் செய்வதில் முதல்வர் துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்டு கெட்டுப்போன ஈரலுக்கு சிகிச்சை அளித்து செம்மை படுத்த வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்மபுரியில் துப்பாக்கி களவு போன விவகாரம் வேறு திசையில் செல்கிறது. இதற்கு அப்பாவி மக்களை 100க்கும் மேற்பட்டோரை பிடித்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதில் உளவுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போது அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும், மனித உரிமை மீறலின் எந்த விதியையும் மீறக்கூடாது என்பதை காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ள காவல்துறையின் 3வது கமிஷன் அறிக்கையில் வேலை நிலை, ஊதிய உயர்வு, வீட்டு வசதி உள்ளிட்ட இதர சலுகைகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று ஆட்சி மீது புகார் கூறப்படுவதும், சட்டம், ஒழுங்கு முன்பைவிட இப்பொழுது நன்றாக இருக்கிறது என்று அரசு தரப்பில் பதில் சொல்வதும் ஒரு பக்கம் இருந்தாலும் ஆக மொத்தத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அரசியல் ரீதியான தொடர்பும், இந்த ரகசிய தொடர்பும் முற்றிலும் ஒழிக்கப்பட்டால் ஒழிய, காவல்துறை மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டேதான் இருக்கும். பல்வேறு துணிச்சலான நடவடிக்கை மேற்கொள்ளும் முதல்வர், காவல் துறையை சீர் செய்வதில் துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்டு கெட்டுப்போன ஈரலுக்கு சிகிச்சை அளித்து செம்மை படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.