விழுப்புரம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மலேசியாவை சேர்ந்த வளர்மதி ( 45), வேணி ( 48), ஈஸ்வரி (28) ஆகியோர் தமிழகத்திலி உள்ள புனித ஸ்தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மதுரைக்கு வந்தனர். மதுரையிலிருந்து நேற்றிரவு டாடா சுமோ காரில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் பாண்டியன் என்பவர் ஓட்டி வந்தார்.
விழுப்புரம் அருகே பிடாரம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் வளர்மதி, வாணி, ஈஸ்வரி, பாண்டியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.