சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்திய தரநிர்ணய கழக அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையின் போது, வாசூ வாட்டர் சிஸ்டம் என்ற இந்நிறுவனம் ஐ.எஸ்.ஐ. முத்திரையை பயன்படுத்துவதற்கு உரிமம் பெற்றிருக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த நிறுவனம் பூபி என்ற பெயரில் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட கேன்களில் குடிநீரை விற்று வந்துள்ளது. இக்குற்றம் நிருபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
இதுபோன்ற போலியான மினரல் வாட்டர் தயாரிக்கப்படுவது தெரியவந்தால் இந்திய தரநிர்ணயம் நிறுவனம், தென் மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி சென்னை-600 113 என்ற முகவரியிலோ 044-2254 2365, 2254 1076 தொலைபேசி எண்கள் மூலமாகவோ தெரிவிக்கும்படி பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.