தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அரசியல் சதி தீட்டப்படுவதாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு 2 வாரத்துக்குள் சம்பந்தப்பட்டோரை கைது செய்யவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அண்மையில் காரைக்குடியில் உள்ள அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க அரசியல் சதி நடப்பதாகத் தெரிகிறது. இதற்கு தமிழக அரசு இடம்கொடுத்துவிடாமல் தடுக்கவேண்டும்.
ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற மதிப்பெண் உச்சவரம்பை அதிகரித்துள்ள மத்திய அரசின் ஆணையை திரும்பப் பெறவேண்டும். அதேபோல் மாணவர்கள் விடுதியை மேம்படுத்தி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசு வழங்கி வந்த ரூ. 2-க்கு ஒருகிலோ அரிசி தற்போது அளவு குறைவாக வழங்கப்படுகிறது. 3 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா கொடுத்துள்ளது, 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் முற்றிலும் தவறானவை.
கட்சியின் 10-ம் ஆண்டு தொடக்கவிழா மாநாடு மதுரையில் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அகில இந்திய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர் என்று கிருஷ்ணசாமி கூறினார்.