தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தை மாதம் 1ஆம் தேதியாக மாற்றம் செய்து அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சித்திரை 1ஆம் தேதிக்கு பதில், தை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றியது தவறு. ஆகவே, இதற்காக கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முகோ பாத்யாயா, வேணு கோபால் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜா கலிபுல்லா, பரந்தாமன் ஆகியோர் ஆஜராகி வாதாடுகையில், தமிழ்ப்புத்தாண்டு தேதியை மாற்றியதில் யாரும் தலையிட முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. எனவே நீதிபதிகள் நேரத்தை வீணடிக்கும் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரதம் அபராதம் விதிக்க வேண்டும் என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.