''புதிதாக காளான்களாக முளைத்துள்ள அரசியல் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை அடுத்த வானகரத்தில் இன்று நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வைச் சொல்லாமல், என்னுடைய பெயரை சொல்லாமல் எவருமே அரசியல் நடத்த முடியாது. அது பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, காளான்களைப் போல முளைக்கும் புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி அதுதான் இப்போதைய நிலை.
இன்னும் சில காலத்தில் என்ன நடக்கும் என்றால் இங்குள்ள பழைய கட்சி இல்லாமலேயே போய் விடும். புதிதாக முளைத்துள்ள கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். அரசியலில் உள்ள இந்த தீய சக்திகளை மக்கள் தூக்கியெறியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
பல கட்சிகள் இருந்தாலும், அவைகள் எல்லாம் சுய லாபத்திற்காக இயங்குகிறது. மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே தலைவர் நான் தான். ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க தான். இதை மக்களும் மறக்கவில்லை. நீங்கள் உற்சாகத்தோடு இருங்கள். தொடர்ந்து மக்களுக்கு தொண்டாற்றுங்கள். மீண்டும் ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்வோம். தமிழகத்தில், மட்டுமல்ல இந்தியாவையே நாம் நிச்சயம் ஆள்வோம் என்று ஜெயலலிதா கூறினார்.