ஈரோடு அருகே மாணவர்கள் இரு பிரிவினருக்கிடையே நடந்த சண்டையில் மாணவன் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 7 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சனு குரியகோஸ் (20). ஈரோடு, சித்தோடு சத்தி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் "ஹோட்டல் மேனேஜ்மென்ட்' இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 9ஆம் தேதி சீனியர் மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த சனு ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8.40 மணிக்கு சனு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் "மெடிக்கல் ரிப்போர்ட்' கேட்டு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க காவலர்கள் குவிக்கப்பட்டனர். "ராகிங்' பிரச்னையால் மாணவர் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
சென்ற 9ஆம் தேதி சனு தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள சமயலறைக்கு சாப்பிடச் சென்றார். அங்கு சீனியர் மாணவர்களுடன் ஜூனியர் மாணவர்களும் இருந்தனர். சாப்பிடும் போது, இரண்டு கோஷ்டியினருக்கும் தகராறு ஏற்பட்டது. சனுவின் வயிற்றிலும், மர்ம உறுப்பிலும் எட்டி உதைத்தனர். இதனால், ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக சனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார் எனக் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ரெனிஷ், பேர்லி, சுராஜ், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அபிலாஷ், சுஜின் ஆகியோர் மீது சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், சனுவின் நண்பர் ஜோதீஸ் என்பவர் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கப் போவதாக கூறினார். இதையடுத்து, அவரையும் அந்த கோஷ்டி தாக்கியது. இதில், ஜோதீஸின் கை உடைந்தது. அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லூரி மாணவனை அதே கல்லூரி மாணவர்களே அடித்துக் கொன்ற சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.