சென்னையில் இருந்து விமானம் மூலம் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்த முயன்ற வாலிபரை சுங்கத்துறையினர் பிடித்தனர்.
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானத்தில் போதை பொருளை கடத்தி செல்ல முயற்சி நடப்பதாக நேற்றி இரவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை செய்தனர்.
அப்போது அபுபக்கர் (26) என்பவர் இரண்டு அட்டை பெட்டிகளுடன் மலேசியா செல்ல வந்தார். அவரை பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அட்டை பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் கார்பன் பேப்பர் சுற்றப்பட்டு அதற்குள் 20 கிலோ எடை கொண்ட கேட்டாமின் என்ற போதை பொருள் பாக்கெட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அபுபக்கரை விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அபுபக்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு ரூ.2 கோடி.
இதேபோல் கடந்த 7ஆம் தேதி கோயம்முத்தூர், சென்னை விமான நிலையங்களில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.