ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தவித்த அகதிகள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் சேர்த்தனர்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதனால் அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாமிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தற்போது இலங்கையில் கடும் மோதல் நடந்து வருவதால் அகதிகள் வரத்து அதிகரித்துள்ளது. இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த புஷ்ப ராணி (40), மதனிகா (18), அன்னக்கிளி (43), மதுமதி (18), பெருஞ்ஜோசப் (20) ஆகியோர் படகில் ராமேஸ்வரம் வந்தனர். இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் 5வது மணல் திட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.
இதனால் அவர்கள் நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் இரவு முழுவதும் முழங்கால் அளவு தண்ணீரில் தவித்தனர். அப்போது ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர படையினர் அவர்கள் 5 பேரையும் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து அகதிகள் கூறுகையில், இரு பிரிவினருக்கும் இடையே போர் உச்சக்கட்டம் அடைந்துள்ளதால் இலங்கையில் வாழ முடியவில்லை. இதனால் உயிருக்கு பயந்து நாங்கள் தலா ரூ.22 ஆயிரம் கொடுத்து ராமேசுவரத்துக்கு வந்தோம். ஆனால் படகோட்டிகள் நடுக்கடலில் எங்களை இறக்கி விட்டு சென்று விட்டனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.