''நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்கள் குடித்திருக்கிறார்களா என்பதை கண்டறியும் கருவி விரையில் பெற்றுத் தரப்படும்'' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை இணைக்கும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் கிராம சாலைகளில் வரும் வாகனங்கள், நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. அதனால், அந்த இணைப்பு சாலைகளில் வேகத்தடைகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் விபத்துக்களில் சிக்குவோருக்கு சிகிச்சை அளிக்க 100 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா? என்பதை கண்டறியும் கருவிகள் விரைவில் பெற்றுத்தரப்படும்.
சென்னை குரோம்பேட்டையில் ஓட்டுனர் பயிற்சி அகாடமி தொடங்க கோரப்பட்ட மத்திய நிதி உதவி வருவது தாமதமாகி வருகிறது. அதனால், தமிழக அரசே நிதி உதவி தர கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னையில் ஆட்டோ மீட்டரில் உள்ளபடி கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
ஆம்னி பேருந்துகளை (கி.மீ.க்கு 1 ரூபாய்) விட குறைந்த கட்டணத்தில் தற்போது இயக்கப்படும் அரசு குளிர்சாதன விரைவு பேருந்துகளுக்கு (கி.மீ.க்கு 80 பைசா) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு விரைவு பேருந்துகளில், கி.மீட்டருக்கு 58 பைசாவும், சாதாரண ஆம்னி பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 80 பைசாவும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. மார்ச் மாதத்துக்குள் திருச்சி, கோவை கோட்டங்களுக்கு தலா 25 ஏ.சி. பேருந்துகளும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 50 ஏ.சி. பேருந்துகளுமாக 100 பேருந்துகளும் இயக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மட்டும் வான் நீல வண்ணம் (ஸ்கை புளூ கலர்) பூச வேண்டும். இதற்காக சிறப்பு எப்.சி.-யை அந்த வாகனங்கள் பெறவேண்டும் என்று அமைச்சர் நேரு கூறினார்.