"கருணாநிதி தானாகவே ஓய்வு எடுத்துக் கொள்வது தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகுந்த நலம் பயக்கும். மறுத்தால், மத்திய அரசே கருணாநிதியை ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்புவது தான் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்திய நாட்டிற்கே நன்மை பயக்கும்" என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது ஆட்சிக் காலத்தில், 2001-2002 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 50 லட்சம் ஏக்கர் (20 லட்சம் ஹெக்டேர்) தரிசு நிலங்களை, "தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்'' கீழ் மேம்படுத்தி வளம் கொழிக்கச் செய்வோம் என்று அறிவித்திருந்தோம். ஆனால் அந்த தரிசு நிலங்கள் அத்தனையும் அரசிடம் உள்ளதாக நாங்கள் எங்கேயும் கூறவில்லை. பெரும்பாலான தரிசு நிலங்கள் ஏழை எளியோரிடம் பட்டா நிலங்களாக உள்ளதால், பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியோடு ஒப்பந்த முறையில் அந்த தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.
50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களும் அரசிடம் உள்ளன என்றும், அந்த நிலங்களை பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறோம் என்றும் கருணாநிதி தவறாகப் புரிந்து கொண்டார்.
1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அந்த ஐந்து ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளை அவரே தாக்கல் செய்தார். 1996-97-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தரிசு நில மேம்பாடு மற்றும் இதர பொருள்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த கருணாநிதிக்கு, அது என்ன கதி அடைந்தது என்பது தெரியாதா? கருணாநிதியால் தாக்கல் செய்யப்பட்ட 1999- 2000-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 15 விழுக்காடு தரிசு நிலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அது என்ன கணக்கு என்று கருணாநிதிக்கு தெரியாதா? அதில் அரசு நிலம், தனியார் நிலம் என்று பிரித்துக் காட்டப்படாதது கருணாநிதிக்கு தெரியாதா? எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டே மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறாரா? அல்லது மூடி மறைக்கிறாரா? என்பதை கருணாநிதிதான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இதையெல்லாம் நான் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினால் அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல், "உள்ளங்கை அளவு நிலம் இருந்தாலும் அதை ஏழைகளுக்குத் தான் கொடுப்பேன்'' என்கிறார் கருணாநிதி. நாட்டு மக்களுக்கு நான் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், நான் விவரம் தெரியாமல் பேசுவதாக வசைபாடுகிறார்.
5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தனியாரிடம் உள்ள பட்டா நிலத்திற்கும், அரசு நிலத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரியவில்லை; தான் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கைகளில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை; பொடா சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் அவருக்குத் தெரியவில்லை; சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் குறித்தும் கருணாநிதிக்குத் தெரியவில்லை.
கருணாநிதி தானாகவே ஓய்வு எடுத்துக் கொள்வது தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகுந்த நலம் பயக்கும். மறுத்தால், மத்திய அரசே கருணாநிதியை ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்புவது தான் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்திய நாட்டிற்கே நன்மை பயக்கும்" என்று கூறியுள்ளார்.