தமிழகத்துக்கு 2008-09 ஆம் நிதி ஆண்டுக்கான திட்ட நிதி ஒதுக்கீட்டை ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்தியத் திட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2008-09 ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீட்டை முடிவு செய்வதற்கான மத்திய திட்டக்குழு கலந்தாலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சர் அன்பழகன் தமிழக அரசு சார்பில் முன்வைத்த கோரிக்கைகள்:
பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான தமிழ்நாட்டின் மொத்த ஒதுக்கீடு ரூ.85,344 கோடி என தேசிய வளர்ச்சிக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு, 2008-09 ஆம் ஆண்டுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.15,500 கோடியாக உயர்த்தவேண்டும். மேலும் திட்ட இலக்குகளை எய்தும் வகையில் திட்ட ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவதற்கு கூடுதல் மத்திய உதவியினை வழங்கவேண்டும். விழுப்புரம்-திண்டுக்கல் அகல ரயில் பாதையை இரு வழித்தடமாக மாற்றுவதற்கு மத்தியத் திட்டக்குழு ஒப்புதல் அளிக்கவேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கவேண்டும்.
மாநிலத்துக்கு உள்ளே பாயும் நதிகளை இணைக்கும் திட்டப் பணிகளுக்கு, விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன பயன் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட மத்திய அரசு உதவி அளிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து மத்திய திட்டக்குழு, தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று 2008-09 ம் ஆண்டுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்த்த ஒப்புதல் அளித்தது" என்று கூறப்பட்டுள்ளது.