சங்கரராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் புதுவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாக அறங்காவலராக இருந்த சங்கரராமன் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 -ந் தேதி கோயிலில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைத் தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியர்கள் இருவர் உள்ளிட்ட 24 பேர் மீது கொலை செய்தல், திட்டமிடுதல், நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.
இவ்வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியும், இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞரை மாற்றக் கோரி சங்கராச் சாரியர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மாற்றியதுடன், சங்கராச்சாரியர்களுக்கு பிணை விடுதலையும் அளிக்க உத்தரவிட்டனர்.
இதனிடையே இவ்வழக்கு இன்று புதுவை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டி. கிருஷ்ணராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சங்கராச்சாரியார் உள்ளிட்ட குற்றம் சாட்டப் பட்டவர்களில் 10 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜரானார்கள். சங்கராச்சாரியர்கள் உள்ளிட்ட 14 பேர் ஆஜராகவில்லை.
இவ்வழக்கு தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மாற்றப்பட்ட நிலையிலும், தமிழக அரசு நியமித்த வழக்கறிஞர் மாற்றப்படவில்லை. இதுத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.