ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு வருகிற 26 ஆம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுவார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜப்பான் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழகம் திரும்பிய தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜப்பான் நாட்டு சுற்றுப் பயணத்தின் வெற்றியாக, சுமார் 20 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஒரு முடிவு வந்திருக்கிறது" என்றார்.
மேலும், "1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இடையில் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2006-ஆம் அண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்துக்கு புத்துயிருட்டிச் செயல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டத்திற்கு ஆகும் மொத்த செலவில் 85 விழுக்காட்டைத் தருவதற்கு ஜப்பான் நாட்டு சர்வதேச நிதி நிறுவன அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்காக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், தமிழகத்துக்கு பலமுறை வந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்கள்.
இதையடுத்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.1336 கோடியில் திட்ட மதிப்பீடு உருவாக்கப்பட்டது. இதில், ரூ.1,141 கோடியை 1.2 விழுக்காடு வட்டி அடிப்படையில் ஜப்பான் நிதி நிறுவனம் வழங்கும்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வருகிற 26-ஆம் தேதி தர்மபுரியில் நடக்கும் விழாவில், முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள் 17 பேரூராட்சிகள், 6,755 பஞ்சாயத்துகளை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இது தவிர, சிதம்பரம், ஆம்பூர், பட்டுக்கோட்டை, பேரணாம்பட்டு, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கும், திருச்சி குடிநீர் திட்டத்துக்கும் ரூ.344 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில் ரூ.300 கோடியை வழங்குவதற்கு ஜப்பான் நிதி நிறுவனம் ஒப்புதல் தந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் மார்ச் மாதம் டெல்லியில் கையெழுத்தாகும்.
ரூ.9700 கோடி மதிப்பீட்டில் 46.5 கிலோ மீட்டர் தூரம் அமையவுள்ள சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்காக, டோக்கியோவில் உள்ள மெட்ரோ இரயில் போக்குவரத்தை பார்வையிட்டேன். இந்தத் திட்டமும் விரைவில் நிறைவேறும். இதில், ஜப்பான் நிறுவனம் நிதி தருவதில் தாமதம் ஏற்பட்டாலும், தமிழக அரசே நிதி ஒதுக்கும் என்று முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார் மு.க.ஸ்டாலின்.