2011 இல் தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் பேசுகையில், "இக்கட்சி 2011இல் மாநிலத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். எதற்கும் தன்னம்பிக்கை அவசியம். முடியாது என நினைக்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் முதல்வராகும் தகுதி உள்ளது. அத்தகைய தகுதியை உருவாக்கும் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி விளங்கும்" என்றார்.
"காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குப் பார்வை இருந்தது. கல்வி, தொழில், விவசாய வளர்ச்சிக்கு திட்டம் தீட்டப்பட்டதால் மாநிலம் வளர்ச்சியடைந்தது. தற்போது அத்தகைய தொலை நோக்குப் பார்வையுடன் சிறந்த திட்டங்களை நிறைவேற்றும் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி அமையும்.
இளைஞர்களுக்கு உதவும் வகையில் 2025 என்ற தொலை நோக்குத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதை 14 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிப்போம். இலவசத் திட்டங்களை விட தொழிற்பயிற்சி அளித்து இளைஞர்களை சொந்தக் காலில் நிற்கச் செய்வோம். கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்" என்றார் சரத்குமார்.