முதலமைச்சராக வேண்டுமென்று நினைக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பேரவையில் பேசுவதை விடுத்துத் திருமண விழாவில் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல பொறுப்பில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக் கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்த கட்சியின் தலைவர் தான் திருமண விழாவில் அரசியல் பேசக் கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பார்க்கும் போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்? விருத்தாச்சலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்ட மன்றத்திற்கு அனுப்பியது எதற்காக? ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்த போது பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந்தால் அதற்கு பதில் கிடைத்திருக்குமல்லவா?
சந்து முனையில் சிந்து பாடுகிறார்!
ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள், ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான்தான் ஆட்சிக்கே வரப்போகிறேன் என்று சொல்லுபவர் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். அதை விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்து பாடினால் என்ன செய்வது.
தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது? ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே அதை அலங்கோலம் என்கிறாரா? விவசாயிகளுக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறுகிறாரா? மகளிருக்கு இலவச எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவசமாக வழங்கப்படும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கும், இரண்டாம் கட்டமாக 160 கோடி ரூபாய்ச் செலவில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை அவற்றில் 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளதே, அதை அலங்கோலம் என்கிறாரா?
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ஏழை, எளியவர்களுக்கெல்லாம் தொடர்ந்து வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கி வழங்கப்பட்டு வருகிறதே, அது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா? தொழிலாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியிலே போனஸ் என்பதே இல்லாத நிலைமை இருந்ததை மாற்றி, தற்போது அவர்கள் எல்லாம் போனஸ் பெறுகின்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோமே, அது தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா?.
விஜயகாந்த் கருத்தில் கோளாறு!
நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, பல ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறதே, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதே, அதையும் மீறி இன்னும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே, இவைகள் எல்லாம் தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.
அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவதாகவும், நெல்லையிலே உள்ள மக்களிடம் அந்தத் தலைவர் கூறியிருக்கிறார். ஆட்சிக்கு வர வேண்டும், முதலமைச்சராக வேண்டுமென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல குற்றச்சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக் கூடாது. மக்களைக் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை எப்படி என்று விளக்கம் தர வேண்டாமா?
உருப்படியாக எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறாரே, மேலே பட்டியலிடப்பட்டுள்ள காரியங்கள் எல்லாம் உருப்படியானவைகளாக அவருக்குத் தெரியவில்லையா? சென்னையிலே 9,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் திட்டத்தை தொடங்கிடவும் 1,340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கிடவும், நமது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டிற்குச் சென்று பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அடுத்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதே! அது தே.மு.தி.க. தலைவருக்கு உருப்படியான காரியமாகத் தெரியவில்லையா?
8-ஆம் தேதி நடைபெற்ற ஒரே நாள் அமைச்சரவை கூட்டத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்க தக்கவிதத்தில் ஒப்புதல் அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதே! அது உருப்படியான காரியமில்லையா? தமிழ்நாட்டு மக்களே நீங்கள் தான் இது பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.
தி.மு.க.விற்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தே.மு.தி.க தலைவர். இந்த பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது? பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இல்லையா? திருமணம் ஆகாமல் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவி திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15ஆயிரம் ரூபாய் வீதம் பல்லாயிரணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதே! மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா இது?
அது போலவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே! அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது எந்த ஆட்சியிலே! கழக ஆட்சியில் அல்லவா? அது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா? இந்தியாவிலே எந்த மாநிலத்திலேயாவது அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தமிழகத்திலே அமைக்கப்பட்டுள்ளது போல வாரியங்கள் அமைக்கப்பட்டு, அந்த தொழிலாளர்களுக்கெல்லாம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறதா?
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அரசு அலுவலர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டது உண்டா? நெசவாளர்கள் வாழ்விலும் வளம் சேர்க்க வேண்டுமென்பதற்காக இலவச மின்சாரச் சலுகையை அவர்களுக்கு அளித்ததோடு, இலவச வேட்டி, சேலைத் திட்டத்தையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறோமே, அது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா? மக்களுக்கு இந்த ஆட்சியிலே எந்த நன்மையும் இல்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து அவர் கூறுகிறார்.
தேசியக் கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சி மீதும் குறை கூறியிருக்கிறார். தேசியக் கட்சி தமிழக மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை? தமிழை செம்மொழியாக அறி வித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசு தானே!
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே? தற்போதைய ஆட்சியிலே தானே! கடல்நீரை குடிநீராக்கும் திட்டதிற்கு 1,000 கோடி ரூபாய் தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சி தானே? எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்து விட்டு நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதா?
ஆதாரமில்லாக் குற்றச்சாற்று!
எழுப்பப்படும் குற்றசாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப் பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறுகின்ற குற்றச்சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல்வதுதானே! எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது? நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிகர்கள் கூட்டத்தை எல்லாம் தனது கட்சிக்காரர்களின் கூட்டம் என்று எண்ணி கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு.
கச்சத்தீவு பற்றி எல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசியிருக்கிறார். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த வகையில் கச்சத்தீவு பற்றி உண்மை விவகாரங்கள் அவருக்கு தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடமாவது கேட்டு பேசியிருக்கலாமே!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தற்போது அறிவிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை பற்றியும் பேசி ஏன் இத்தனை ஆண்டு காலம் கொண்டு வரவில்லை என்று கண்டுபிடித்து ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கிறார். நல்ல வேளை! அண்ணாவின் நினைவிடத்தைப் பார்த்து, ஏன் 1967 வரையில் சென்னை ராஜ்யம் என்பதை மாற்றி "தமிழ்நாடு'' எனப் பெயரிடவில்லை எனக் கேட்காமல் போனாரே? தமிழ்ப் புத்தாண்டு "தை முதல் நாள்'' என்பதை நடைமுறைப்படுத்த தான் இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏன் முன்பே கொண்டு வரவல்லை என்கிறாரே, இவர் ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்டு நாம் சிரிக்கலாமல்லவா!
மின் பற்றாக்குறை பற்றியும் பேசி, மத்திய அரசிடம் கேட்கலாமே என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார். மின் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், நான் கடந்த முறை டெல்லி சென்ற போது பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் அந்த துறையின் அமைச்சரிடமும் மின் பற்றாக் குறை குறித்து பேசி, அவர்களும் உடனடியாக தமிழகத்திற்கு 300 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்த செய்திகள் எல்லாம் ஏடுகளில் விரிவாக வெளிவந்திருக்கின்றன.
அவற்றை எல்லாம் படிக்காமல் தே.மு.தி.க தலைவர் தமிழக அரசு மீது குறை கூறி இருக்கிறார். அரசியல் கட்சியை தொடங்கி அதனை நடத்திடவும், ஆட்சி நடத்திடவும் விரும்புகிறவர், அன்றாடம் நாளேடுகளைப் பார்ப்பதும், அதிலே அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற முயற்சிகளைப் படித்து தெரிந்து கொள்வதும் முக்கியமல்லவா!
எந்தத் திட்டத்தில் ஊழல்?
ஊழல் பற்றி எல்லாம் அவர் கூட்டத்திலே பேசி இருக்கிறார். எந்த திட்டத்திலே ஊழல்? ஒப்பந்த புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லாவற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடைபெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா!
பேசுகிறவர்கள், அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தை கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது. யார் ஊழல்வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.
சிமெண்ட் பிரச்சினை பற்றி பேசும் போது 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 1,500 டன் சிமெண்ட் தான் விற்பனையாகியிருக்கிறது என்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அரசு சார்பில் எப்போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட்டைகள் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று தான் அரசு சார்பில் கூறப்பட்டது.
20 லட்சம் டன் சிமெண்டிற்கும் 20 லட்சம் மூட்டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா? எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. பண்ருட்டியார் போன்ற தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு கொண்டு, அதை குறித்து வைத்து கொண்டு பேச கூடாதா? அது மாத்திரமல்ல, தனியார் சிமெண்ட் மூட்டைகள் பிளாஸ்டிக் பைகளிலே வழங்கப்படுகிறது என்றும், அரசு மூலம் வழங்கப்படும் சிமெண்ட் சாக்கு பைகளிலே வழங்கப்படுகிறது என்றும் அதிலே ஏதோ ஊழல் என்றும் அந்த தலைவர் பேசி இருக்கிறார். அதிலே என்ன ஊழல் சொல்கிறார் என்றே புரியவில்லை.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தலைவர் ஆகலாம். அதிலே எந்த தவறும் கிடையாது.
முன்பெல்லாம் கட்சி ஆரம்பிப்பது என்றால், மக்களுக்காக பணியாற்றி, உழைத்து தியாகம் செய்து சிறைக்கு சென்று பாடுபட்டு கொள்கைகளை வகுத்து அவற்றை மக்களிடம் எடுத்து சென்று பரப்பித் தான் கட்சியை வளர்க்க வேண்டி இருந்தது.
தற்போது அத்தகைய நிலையெல்லாம் தேவையில்லை என்றாகி விட்டது. அதைப் பற்றி நமக்கு விருப்பு வெறுப்பில்லை. ஆனால் அப்படி கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையை பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது, இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.