மதுரை மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் வழியில் விழுப்புரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி நடிகர் சரத்குமார் கட்சியைச் சேர்ந்த பொதுக் குழு உறுப்பினர் மனைவி உள்ளிட்ட இருவர் இன்று காலை சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதல் மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் கிராமணித் தெருவில் வசித்து வரும் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான இரவிச்சந்திரன் (37) தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15 பேருடன் டெம்போ டிராவலர் வேன் ஒன்றில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க சென்றனர்.
மாநாட்டை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருந்த போது விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டையை அடுத்த சித்தானாங்கூர் அருகே சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது இவர்கள் வந்த வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் அந்த இடத்திலேயே இரவிச்சந்திரனின் மனைவி முத்துலட்சுமி (34), டிப்பர் லாரி ஓட்டுநர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரகுநாதன் (34)ஆகிய இருவரும் பலியானார்கள்.
இந்த விபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை அன்பழகன் நகர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த சுந்தர் இராமன் (50), அவரது மகள் சாந்தி (25), இராமச்சந்திரன் மகள் மலர்விழி (11) ,முரளியின் மனைவி சாமுண்டிஸ்வரி (30), டெம்போ டிராவலர் ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அரண்மனைத் தெருவைச் சேர்ந்த மந்திர மூர்த்தி (20) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.