தி.மு.க.வின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தேவையின்றித் தனது உருவப் படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதி தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே நமது கழகத்தினர், குறிப்பாக அமைப்புகளின் பொறுப்புக்களிலே இருப்போர், ஆட்சி மன்றங்களின் பொறுப்புகளிலே இருப்போர், நிர்வாகிகள், பல்வேறு பதவிகளிலே இருப்போர், அனைவருமே குறிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு மட்டுமின்றி எல்லா செய்திகளையுமே பெரிய பெரிய பேனர்கள் எழுதியும், அச்சியற்றிய சுவரொட்டிகளை ஒட்டியும் அவற்றில் யார் உருவங்கள் தான் இடம் பெறுவது என்றில்லாமல் பத்திரிகைகளில் ஒரு பக்க விளம்பரங்கள் கொடுத்து அபரிமிதமாக ஆடம்பர செயல்களில் ஈடுபடுவது என்பது மக்களின் பெரும் பகுதியினருக்கு மன எரிச்சலை உருவாக்கக் கூடியது என்பதையும் நமது கழகத்திற்கு சிறிதளவு ஊனத்தையாவது ஏற்படுத்தக் கூடியது என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருந்தால் நான் என் கடமையிலிருந்து தவறியவன் ஆவேன்.
"சிறு துளி பெரு வெள்ளம்'' எனக் கொண்டாலும், "சிறு பொறி பெரும் தீ'' எனக் கொண்டாலும் இத்தகைய செயல்கள் ஊழிப்பெரு வெள்ளமாக ஆகாமலும், உருக்குலைக்கும் தீயாக மாறாமலும் தடுத்து நிறுத்தும் தற்காப்பு முயற்சியாகத்தான் இந்த கண்டிப்பான அறிவிப்பை கழகத் தோழர்களுக்கு விடுக்கின்றேன்.
தவிர்க்க முடியாத நிகழ்வுகளையன்றி வேறு எந்த நிகழ்வுகளையொட்டியும் அவற்றில் என் உருவப்படத்தைக் கூட வெளியிடுவதை தவிர்ப்பதின் மூலம் இயக்கத்தினர் எல்லோருக்கும் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என்று கழகத் தோழர்கள் அனைவருக்கும் இந்த கண்டிப்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்" என்று கூறியுள்ளார்.