தர்மபுரி அருகில் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகில் உள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு அத்துமீறி நுழைந்த மர்மக் கும்பல், சிறை அறையின் கதவுகளை உடைத்து அங்கிருந்த 6 துப்பாக்கிகள், வாக்கி டாக்கி கருவி ஒன்று ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றது.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. சஞ்சய் அரோரா, சேலம் சரக டி.ஐ.ஜி. செண்பகராமன், காவல் துறை கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோடா ஆகியோர் அதியமான் கோட்டை சென்று முதல்கட்ட விசாரணை நடத்தினர்.
மேலும், இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது நக்சலைட்டுகளா என்று காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. விஜய குமார் விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்தபோது பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் சுப்பிரமணி, ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, இவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் துறை கண்காணிப்பாளர் நஜ்முல் ஹோடா இன்று உத்தரவிட்டார்.