ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கச் சதி நடப்பதாக அக்கட்சியின் தமிழகத் தலைவரும் திரைப்பட நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் கூறுகையில், "பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஃபார்வர்ட் பிளாக் கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. இதுவரை 15 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினோம்.
இந்நிலையில், பல பெரிய கட்சிகள் எங்கள் கட்சியின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றன. அவர்களிடம் இருந்து மிரட்டலும் வருகிறது. ஃபார்வர்ட் பிளாக் கட்சியை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டுபவர்கள் மிரண்டு போவார்கள்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், யாருடைய கொள்கைகள் எங்களுக்கு ஒத்து வருகிறதோ அவர்களுடன் கை கோர்ப்போம். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கக் கோரி கொடுத்த மனு, பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது." என்றார்.