சென்னை மாநராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டண உயர்வைக் கைவிடக் கோரி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குப்பை அள்ளுதல் முதல் அனைத்து அடிப்படைப் பணிகளும் சென்னை மாநகரில் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சென்னை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். அதே சமயத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை 47 விழுக்காடு முதல் 284 விழுக்காடு வரை உயர்த்தி தி.மு.க. அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எனது ஆட்சிக் காலத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்ட மக்களுக்கு 100 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த கழிவு நீர் இணைப்பு வசதி தற்போது மறுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் சென்னை மாநகர மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
புதிய இணைப்புகள் வேண்டி விண்ணப்பிக்கும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இணைப்பை பெறுவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். சென்னைவாழ் மக்களின் தலையில் நிதிச் சுமையை சுமத்தி இருக்கும் தி.மு.க. அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகர மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்தி இருக்கும் திமு.க. அரசைக் கண்டித்தும், கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை உடனடியாக கைவிடக் கோரியும், வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.