"தீபாவளியிலே என்னென்ன காரியங்கள் நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய இல்லங்களிலே நடைபெற வேண்டும். திருவிளக்குகள் ஏற்றப்பட வேண்டும், புதுக்கோலங்கள் போடப்பட வேண்டும், புத்தாடைகள் புனையப்பட வேண்டும், புனலாட வேண்டும், மகிழ்ச்சிகரமான நாளாக பொங்கலைக் கொண்டாடி, இது தமிழர்களுடைய புத்தாண்டு நாள்" என்று மகிழ்ந்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.
தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு, சங்கத்தமிழ் பேரவை சார்பில் பாராட்டு விழா நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இவ்விழாவில் அவர் பேசியதாவது.
கடந்த 23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆற்றிய உரையில் தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு நாள் எனக் கொண்டாடப்படும் என்று அரசின் சார்பில் அறிவித்தார்.
இன்றைக்கு இருக்கின்ற பழைமைவாதிகள், கிராமத்திலே இருந்து சென்னை வரையிலே உள்ள பெரியவர்களானாலும் சரி, மூத்த தாய்மார்களானாலும் சரி, அனைவருமே இன்றைக்கு எண்ணிக் கொண்டிருப்பது வேறு ஆண்டுகளைத் தான். சமஸ்கிருத ஆண்டுகளைத் தான்.
இன்றைக்கு நம்முடைய மொழியில், நம்முடைய ஆண்டு குறிக்கப்பட வேண்டும், நம்முடைய ஆண்டுக் கணக்கு இருந்திட வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு இந்த அறிவிப்பை- அரசின் மூலமே செய்து, நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவையின் கூட்டத்திலேயே அதை மசோதாவாக அறிமுகப்படுத்தி, வழக்கம் போல, அந்தச் சட்ட முன் வடிவை பெரும்பான்மையாக சட்டமன்றத்திலே உள்ள உறுப்பினர்களுடைய கருத்துக்களை அறிந்து, அவர்கள் வாக்களித்து ஒரே மனதாக தமிழ் ஆண்டு தை முதல் நாள் தொடங்குகிறது என்ற கருத்து இன்றைக்கு சட்டமாக ஆகியிருக்கிறது என்பதை நான் பெருமையோடும், பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழுக்கு துரோகம் செய்கிறவன் தமிழன் இல்லை!
நம்முடைய தாயை நாம் போற்ற வேண்டும். நம்முடைய தாய்க்கு நாம் இடமளிக்க வேண்டும், பெருமை சேர்க்க வேண்டும். அந்தத் தாய், தமிழ்த் தாய், அந்தத் தமிழ்த் தாய்க்கு துரோகம் செய்கிறவன் தமிழனாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் தான், தமிழ் ஆண்டு எது, எப்போது தொடங்குகிறது என்பதை ஆய்ந்திட பெரும் புலவர், தமிழர் தலைவராக ஒரு காலத்தில் நம்முடைய தமிழ் மக்களால் போற்றப்பட்ட பெரியார் அவர்களால் ஆதரிக்கப்பட்ட, அறிஞர் அண்ணா அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைமலை அடிகள் மற்றும் 500 புலவர்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் கூட்டிய கூட்டத்திலே விவாதித்து எடுத்த முடிவு தான் தை முதல் நாள் தமிழர்களின் ஆண்டுக் கணக்கு தொடங்குகின்ற நாள் என்று அறிவித்தார்கள்.
இப்போது அந்த திருவள்ளுவர் ஆண்டை, தமிழ்ப் புத்தாண்டு என்று, அந்தத் தைத் திங்களை முதல் மாதம் என்றும், தைத் திங்கள் முதல் நாள் உழவர்கள் உவகை அடைய, குழந்தைகள் குதூகலம் பெற்றிட, மங்கையர் மகிழ்ச்சி அடைந்திட, உலகமெல்லாம் ஏன் தமிழ்ச் சமுதாயத்து மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய இன்பத்தை இதயப் பூர்வமாக வெளியிடுகின்ற அந்த நாளை, தமிழர் நாளாக, தமிழர்களின் ஆண்டுத் தொடக்க நாளாகக் கொண்டாடுவோம் என்று முடிவெடுத்தோம்.
பொங்கல் நாள் தான் தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மாத்திரமல்ல, அவரைத் தொடர்ந்து பல புலவர்களும் அதே கருத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள்.
அந்த கருத்து சரிதான் என்று ஏற்றுக் கொள்ள நானும், நம்முடைய பேராசிரியர் அவர்களும், நம்முடைய அமைச்சர்களும் கூடிப் பேசி, அமைச்சரவையிலே முடிவெடுத்து, எடுத்த முடிவு சரிதானா அல்லவா என்பதை எங்களை வாழ்த்துவதின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொள்ளத் தான் இங்கே அமர்ந்திருக்கின்ற அறிஞர் பெருமக்களை, புலவர் பெருமக்களையெல்லாம் அழைத்தோம்.
அவர்கள் எங்களுக்கு அந்த அங்கீகாரத்தை தந்திருக்கிறார்கள். இனி நம்முடைய வேலை, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வரும்போது புதுப் பானை வைத்தோம் என்பதோடு நிறுத்தாமல், பொங்கலை இப்போது கொண்டாடுகின்ற தீபாவளியைப் போலவே நாம் கொண்டாட வேண்டும். தீபாவளியிலே என்னென்ன காரியங்கள் நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய இல்லங்களிலே நடைபெற வேண்டும்.
திருவிளக்குகள் ஏற்றப்பட வேண்டும், புதுக்கோலங்கள் போடப்பட வேண்டும், புத்தாடைகள் புனையப்பட வேண்டும், புனலாட வேண்டும்,அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான நாளாக பொங்கலைக் கொண்டாடி, இது தமிழர்களுடைய புத்தாண்டு நாள் என்றும் மகிழ்ந்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
வட மொழியில் அறுபதாண்டுகள். அவற்றின் பெயரை சொல்லும்போது வாயிலே நுழைவதில்லை. சொன்ன பிறகு காதிலும் நுழைவதில்லை. கருத்திலும் பதிவதில்லை. கருத்திலே பதிகின்ற ஒன்று, இவைகள் எல்லாம் புராணக்கணக்கு. உண்மையான வயதுக் கணக்கைக் காட்டக் கூடியவைகள் அல்ல, வருடங்கள் அல்ல. அதனால் தான் தொடர் ஆண்டு கணக்கு வேண்டுமென்று யோசித்தோம். அந்த தொடர் ஆண்டுக் கணக்கு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு என்று தொடங்கினால் தான், தை முதல் நாள் அந்த ஆண்டின் முதல் நாள் என்று குறிக்கப்பட்டால் தான் சரியான கணக்கும் கிடைக்கும், தமிழனுடைய மானமும் தங்கும். தமிழ் மொழியின் உரிமையும் காப்பாற்றப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.